Friday, February 4, 2011

வெப்பம் - ஜோஷ்வா ஸ்ரீதர்


வைரமுத்து 'ஆயிரம் பாடல்கள்' புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, அந்த புத்தகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான திரை இசை பாடல்களில் ஐந்து பாடல்கள் மட்டுமே எழுதிய பின் இசையக்கப்பட்டவை என்று கூறினார். பெரும்பாலும் தமிழ் திரை இசை பாடல்கள் மெட்டமைத்த பின் எழுதப்படுகிறது. ஆனால், எனக்கென்னவோ இன்றைய இசையமைப்பாளர்கள் மெட்டுக்குத்தான் பாட்டு என்று பிடிவாதம் பிடிப்பதில்லை என்று தோன்றுகிறது. இன்றைய பாடலாசிரியர்களின் பேட்டிகளே அதற்கு சாட்சி. இப்போது பாடல் உருவாவது ஒரு கூட்டு முயற்சி என்றாகிவிட்டது.

மெட்டுக்கு பாட்டா இல்லை பாட்டுக்கு மெட்டா என்பதை இப்போது இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் திரைப்படத்தின் இயக்குனர் கலந்து ஆலோசித்து முடிவு செய்கிறார்கள். பல சமயங்களில், ஒரே பாடலின் ஒரு பகுதி மெட்டுக்கு பாட்டு எழுதப்பட்டிருக்கும், பிற பகுதிகள் பாட்டெழுதிய பின் மெட்டமைக்கப்பட்டிருக்கும். இப்போது வெளியாகும் பாடல்களை கேட்கும் போது, இந்த பாடல் மெட்டுக்கு எழுதப்பட்டதா அல்ல எழுதி இசைமைக்கப்பட்டதா என்பதை சற்று நான் ஆராய்வது வழக்கம். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்த வெப்பம் பட பாடல்களை கேட்கும் போது, மெட்டுக்கு பாட்டா பாட்டுக்கு மெட்டா என்று எண்ணியபடி இருந்தேன். ஒரு முடிவுக்கு வந்தேன். சரியா தவறா என்று தெரியவில்லை. நீங்களே படித்துவிட்டு சொல்லுங்கள்.

ஒரு தேவதை வீசிடும் பாடலின் பல்லவியில் மட்டும் பதினெட்டு வரிகள் இருக்கிறது. எந்த இசையமைப்பாளரும் இவ்வளவு நீளமாக ஒரு பாடலின் பல்லவிக்கு மேட்டமைக்கமாட்டார். அப்படியே அமைத்தாலும், மெட்டு, நாம் யூகிக்க  முடியாதா திசைகளில் பயணம் செய்வதாக, இந்த பாடலில் உள்ளது போல் அமையப்பெறுவது அரிது. ஆனால், இந்த பாடலின் சரணம் மெட்டுக்கு பாட்டு வகை. ஒரே மேட்டில் இரண்டு சரணம் எழுதவேண்டிய கட்டாயம் இருப்பதால், பெரும்பாலும் சரணம் மெட்டுக்கு பாட்டாகத்தான் இருக்க வேண்டும். அல்லது, ஒரு சரணம் எழுதியபின் மெட்டமைத்துவிட்டு, அதே மெட்டுக்கு பாடலாசிரியர் இரண்டாவது சரணத்தை எழுதியிருக்கவும் கூடும். 

ஒரு தேவதை வீசிடும் பாடலை போல் அல்லாமல், மழை வரும் அறிகுறி பாடலின் சரணம் எப்படி உருவானது என்பதை அறிவதில் பெரிய கஷ்டம் இல்லை. சரணத்தில் முதல் நான்கு வரிகளிலும் தொற்றி கொண்டிருக்கும் 'ஒ ஒ ஒ' ஓலமே சொல்லிவிடுகிறது, இசையமைப்பாளர், வரிகளை எப்படி பாடலின் மைய தாளத்திற்கு பொருத்துவது என்று புரியாமல், குறுக்கு வழியில் எளிய தீர்வு கண்டிருக்கிறார் என்று. சரணத்தின் இறுதி வரியை மெட்டமைப்பதில் பெரிதும் திண்டாடி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனாலும், அதை ஒட்டி எலும்பும் ஒற்றை வயலின் இசை, பாடலில் ஏற்படும் தற்காலிக தொய்வை சரிசெய்து விடுகிறது.

இந்த திரைப்படத்தின் சிறந்த பாடல் காற்றில் ஈரம். மெட்டுக்கு பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா என்று பிரித்தறிய முடியாது அளவுக்கு, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து பயணிக்கிறது. பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே என்ற வரியில், நெடிலான 'நீ'க்கு இடப்படும் ஸ்வரமும் நீண்டு ஒலிப்பது அழகு. இந்த வரி மெட்டுக்கு எழுதப்பட்டிருந்தால், பாடலாசியர் நீட்டப்பட்ட ஸ்வரத்தில் பொருந்துமாறு நெடில் கொண்டு  துவங்கும் வார்த்தையை உபயோகித்ததில் எந்த ஆச்சிரியமும் இல்லை. ஆனால், 'நீட்டிடுதே' என்று பாடலாசிரியர் எழுதிய பின் இசையமைப்பாளர் இசையமைத்திருந்தால், அவருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.  

இது ஒன்றும் பெரிய சாதனை இல்லை, ஆனால் இப்போது, எழுதிய பாடல் வரிகளை, ஒரு தாளத்திலும், மேட்டிலும் அமர்த்த, இசையமைப்பாளர்கள் படும் பாட்டை கேட்கையில் (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலின் சரணத்தை கேளுங்கள்), இது போன்று சின்ன சின்ன விஷயங்களையும் சுட்டி பாராட்டுவது முக்கியம் என்று நினைக்கிறேன்.

ஜோஷ்வா ஸ்ரீதர், காற்றில் வரும் பாடலின் சரனத்தில், வரிகளின் மெட்டில் சரியான இடங்களில் தொடர் புள்ளிகள் வைத்து சொற்றொடர்களாக அடுக்கி, கடைசி வார்த்தையின் கடைசி எழுத்தின் மீது பயணிக்கும் ஸ்வரத்தால் வரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பாங்கு அருமை. இந்த பாடலின் சொக்கவைக்கும் இனிமைக்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் பாடலை பாடிய கார்த்திக்கின் தமிழ் உச்சரிப்பு.

வெப்பம் திரைப்படத்தின் பாடல்களை, படத்தை பற்றி ஏதும் தெரியாத ஒருவரிடம் போட்டு கேட்கச்சொல்லி,  இந்த திரைப்படத்தின் கதையை யூகிக்கச்சொன்னால், கண்டிப்பாக யாரும் சென்னை குப்பத்தை களமாக கொண்ட கதை என்று சொல்ல மாட்டார்கள். கதைக்கும், கதை களத்திற்கும்  சம்பந்தமே இல்லாமல் ராக், பாப், ஹிப்ஹாப் வகை பாடல்கள் இருப்பது தமிழ் படங்களுக்கு புதிது இல்லை.

புதுப்பேட்டையில் எங்க ஏரியா உள்ள வராதே பாடலின் இசைக்கும் புதுப்பேட்டை ஏரியாவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை, இருந்தும் அந்த பாடலை பற்றி யாரும் பெரிதும் குறை சொல்லாததற்கு காரணம், புதுப்பேட்டையை ஒத்த தமிழ்  வரிகள் மற்றும், பாடகர் அந்த பாடலை பாடிய விதம்.

வெப்பம் படத்தின் பாடல்களை பாடிய கிளிண்டன், சூஜேன், பென்னி தயால், தமிழ் உச்சரிப்பில் பெரிதாக பிழை இல்லா விட்டாலும், அவர்களின் குரல்களின் அதிர்வில் அதீத மேற்கத்திய வாசனை. ஏதோ ஆங்கில பாப் இசை பாடல்களை பாடுவதை போல் பாடி இருக்கிறார்கள். முதலில், சூஜெனின் குரலில் ஒலிக்கும் 'மழை வரும்' பாடல், நரேஷ் இயர் குரலில் ஒலிக்கும் போது, தமிழை தமிழாக உணர்ந்து பாடுவதன் சுகம் பளிச்சென தெரிகிறது.

இருந்தும், இசைத்தொகுப்பாக பார்த்தல், 'ராணி நான் மகராணி' பாடலை தவிர, வெப்பம் திரைப்பத்தின் அனைத்து பாடல்களும் நன்றாகவே இருக்கிறது. ஜோஷ்வா ஸ்ரீதர், தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கவனாக இசையமைத்திருக்கிறார்.  

Wednesday, January 19, 2011

அவன் யுவன் 2011


2010  இல் நான் வாங்கிய தமிழ் திரைப்பட இசைத்தட்டுகள் 25. 2011 இல் நான் கட்டாயகமாக வாங்கப்போகும் தமிழ்ப்பட இசைத்தட்டுகள் எவை என்பதை பற்றி நினைத்து கொண்டிருந்தேன்.

இந்த வருடம் யுவன் ஷங்கர் ராஜா காட்டில் மழை. அமீர், செல்வராகவன், பாலா, ராம் என்று  எந்தெந்த இயக்குனரின் திரைப்படத்தில்  யுவன் தன் திறமையின் உச்சத்தை தொட்டரோ, அவர்களுடன் மீண்டும் இணைகிறார். அமீர் இயக்கத்தில் ஆதிபகவன், செல்வராகவன் இயக்கத்தில் இரண்டாம் உலகம், பாலா இயக்கத்தில் அவன் இவன் மற்றும் ராம் இயக்கத்தில் தங்க மீன்கள் 2011 இல் வெளியாக போகிறது. இது தவிர, லிங்குசாமியின் வேட்டை, வெங்கட் பிரபுவின் மங்காத்தா, க்ரிஷ்ஷின் வானம், தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் (ட்விட்டரில் நான் கேட்ட போது, யுவன், ஆரண்ய காண்டம் படத்தின் பின்னணி இசைத்தொகுப்பு வெளியிடப்படும் என்று கூறினார்) வெளியாகிறது.

இளையராஜாவின் முப்பத்தைந்து வருட இசைப்பணியில், ஒரு வருடத்தில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே (நந்தலாலா) அவர் இசையில் வெளிவந்தது, 2010 இல் தான் என்று நினைக்கிறேன். அந்த படத்தின் பாடல்கள்  2009 இல் வெளியாகிவிட்டது. இளையராஜா இசையமைத்தால் கண்ணை மூடிக்கொண்டு இசைத்தட்டு வாங்கிவிடுவேன். சுசீந்திரன் இயக்கும் 'அழகர்சாமியின் குதிரை' படத்தின் பாடல்களை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இந்த வருடமாவது 'மயிலு' வெளியாகுமா?

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தமிழ் படம் எதுவும் வெளியாகாது என்றே நினைக்கிறேன். கெளதம் மேனன் கொடுக்கும் பேட்டிகளை நம்பி எதுவும் யூகிக்க முடியாது. ரஜினியின் 'சுல்தான்', 'ஹரா' என்று பெயரில் இந்த வருடம் வெளியாகக்கூடும் என்கிறார்கள். இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதோ இசையமைத்து விட்டார். ஒரு படமாவது இந்த வருஷம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரிலீஸ் பண்ணுங்கப்பா.

ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே ஆடுகளத்தில் அசத்திவிட்டார். மதராசபட்டினம் படத்திற்கு பிறகு, இயக்குனர் விஜய்யுடன் ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இணையும் திரைப்படம் தெய்வ மகன். விக்ரம் நடிக்கிறார். மதராசபட்டினம் படப்பாடல்களின் தரத்தின் அடிப்படையில், 'தெய்வ மகன்' இசைத்தட்டை நம்பி வாங்கலாம் என்று நினைக்கிறேன்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் 'நண்பன்' (3இடியட்ஸ் ரீமேக்) இசைத்தட்டை, எப்படியும் ஷங்கர் ஹாரிசை பிழிந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் வாங்கிவிடுவேன். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும்  'ஏழாம் அறிவு' இசைத்தட்டை ஹாரிஸ்-கார்த்திக்-ந.முத்துக்குமார் இணையும் ஒரு பாடலுக்காகவே வாங்கலாம்.

அவ்வளவாக சரத் இசையமைப்பில் வெளிவந்த மலையாள பாடல்களை கேட்டதில்லை, ஆனாலும் அவர் இசையமைக்கும் '180' திரைப்படத்தின் இசைத்தட்டை வாங்கவேண்டும் என்று தோன்றுகிறது.

ரமேஷ் விநாயகம், கார்த்திக் ராஜா, தேவன் ஏகாம்பரம் இசையமைக்கும் எந்த படமாக இருந்தாலும் இசைத்தட்டை வாங்கிவிடுவேன். ஜேம்ஸ் வசந்தன், தமன், வித்யாசாகர் பொறுத்தவரை, திரைப்படம் வெளியானதும் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பாடல்களின் தரத்தை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

ஏதாவது முக்கியமான படத்தை மிஸ் பண்ணிட்டேனான்னு பாத்து சொல்லுங்க

Monday, January 17, 2011

இளைஞன் - வித்யாசாகர்


சென்ற வருடம் 'தி ஹிந்து' நாளிதழில் வெளிவந்த ஒரு பேட்டியில் வித்யாசாகர் தான் 'இளைஞன்' திரைப்படத்தின் பாடல்கள் அனைத்திலும் உள்ள முகப்பு இசை, பின்னிசை மற்றும் இடையிசைக்கு சிம்போனி வடிவத்தில் இசைக்கோர்வை சேர்த்திருப்பதாகவும், அவற்றை மேற்கத்திய சிம்போனி இசைக்குழு வைத்தே ஒலிப்பதிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார். அன்றிலிருந்து நான் 'இளைஞன்' திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிரேன்.

திரைப்படத்தின் முன்னோட்டத்தை வைத்து, கதை எங்கு, எப்போது நடக்கிறது என்று ஒன்றும் புலப்படவில்லை. வித்யாசாகர், திரைப்படத்தின் இசைக்கு இருக்கவேண்டிய ஆதார ஒலியை தீர்மானம் செய்ய சற்றே குழம்பி தெளிந்திருக்கிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் பாணியில் மெட்டமைத்து, இளையராஜா பாணியில் பின்னிசை கோர்த்திருக்கிறார். இக்கால இளைஞர்களும் இசைய, மின் தாளக்கருவிகளில்  தாளம் சேர்த்திருக்கிறார். அந்த கலப்பில் விளைந்த ஒலி - காதில் தேன். பாடல்களின் மெட்டிலோ, இசைக்கோர்வையிலோ நாம் இதுவரை கேட்காத புதுமை ஏதும் இல்லை, ஆனால் காலத்தால் வற்றாத இனிமை உண்டு. அது போதும்.

சிம்போனி இசைக்குழு கிடைத்துவிட்டது என்று (சந்திரமுகி திரைப்படத்தின் பின்னணி இசை அமைப்பில் உணர்ச்சிவசப்பட்டதுபோல் ) உணர்ச்சிவசப்படாமல், அந்தந்த பாடலின் உணர்வுக்கு ஏற்றவாறு, அளவாக, சரியாக இசைக்கோர்வை செய்துள்ளார் வித்யாசாகர். 

சிம்போனி இசைக்குழுவில் உள்ள நூறு வாத்தியங்களும் சேர்ந்து கிளப்பும் இனிய குழப்பத்திலிருந்து விளையும் ஒரு எளிய தெளிவாக, 'மழையில் நனைந்த பூவனம்' பாடலின் மைய்ய இசை தன்னை தனித்து பிரித்து அருவித்துக்கொள்ளும் தருணம், கேட்போரின் மெய் சிலிர்த்து மயிர்கூச்செறியும். 'இமை தூதனே' பாடலின் தாளத்தில் சிறிது எனக்கு குழப்பம் இருக்கிறது, திரையில் காதலர்கள் வால்ட்ஸ் (Waltz) என்னும் மேற்கத்திய நடனத்தை ஆட, பாடலில் கடிகாரத்தின் டிக்-டிக் சத்தத்தை நினைவுபடுத்தும் டேங்கோ (Tango) வகை தாளம் ஒலிக்கிறது. கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

புரட்சியை, எழுச்சியை தூண்டும் பாடல்களில், ற்றம்பெட், ற்றோம்போன் போன்ற உரக்க ஓதப்படும் வாத்தியங்கள் வீரத்தையும் வீரியத்தையும் முழங்குகின்றன. பாடலின் மெட்டும் நெளிந்து வளையாமல், நிமிர்ந்து நேர்வழியில் பயணிக்கிறது. 'இளைஞன்' இசைத்தொகுப்பில் நான் மிகவும் ரசித்த பகுதி, 'தோழா' பாடலின் தொகையறா. வீரம் பொதிந்த மெட்டு, அதை உணர்ந்து பாடிய அடர்ந்த குரல்குழு, அதை ஒத்து ஒலிக்கும் தந்திக்கருவிகள், மெல்ல தொடங்கி விண்ணை தொடும் வேகம் என்று அனைத்தும் சேர்ந்து, இந்த பாடல், கட்டிலில் படுத்து அரை தூக்கத்தில் பாடல் கேட்பவனை கூட விழித்தெழச்செய்யும்.

'ஒரு நிலா' பாடல், சிந்த் (Synth) தாளம், பேஸ் கிடார் கொண்டு, சிம்போனி வாசம் இல்லாமல் தொடங்குகிறது, ஆனால் இடையிசையிலும், பின்னணி இசையிலும் வித்யாசாகரின் இசைக்கோர்வை சிம்போனி இசைக்குழுவின் தந்திக்கருவிகளால் எழுப்பக்கூடிய உணர்வுகளின் ஆழ அகலத்தை அழகாக அளக்கிறது.

பாடகர்களின் குரல்களை மென்பொருள் வைத்து கடித்து குதறாமல், இயல்பாக ஒலிக்கவிடும் மிகச்சில இசையமைப்பளர்களில் வித்யாசாகரும் ஒருவர். சரியாக பாடகர்களை தேர்வு செய்திருக்கிறார். கார்த்திக், ஸ்ரேயா கோஸல், ஹரிஹரன், திப்பு, அன்வேஷா, சின்மயி பாடல்களை உணர்ந்து உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

Wednesday, January 12, 2011

கண்டேன் - விஜய் எபெனேசர்


கண்டேன் பாடல்களை கேட்டேன். கேட்டவுடன், எளிதாக மனதில் தொற்றிக்கொள்ளக்கூடிய இனிதான மெட்டுக்கள். எங்கும் இளமை துள்ளும் கிடார். பாடலின் கீழ் அடுக்குகளில் அளவான வாத்தியங்கள். உறுத்தாத ஒலிக்கலப்பு.  மெட்டுக்கு ஏற்ற எளிமையான தாளக்கட்டும் தாளவாத்தியங்களும். பாடல் வரிகள் தெளிவாக கேட்கிறது. இசை – விஜய் எபெனேசர். இசை – ஹாரிஸ் ஜெயராஜ், என்று போட்டிருந்தாலும் நம்பி  இருப்பேன்.  ஹாரிஸ் ஜெயராஜ், ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு பாட்டிலாவது சேக்சொபோனை பிரதான வாத்தியமாகக்கொண்டு ஒரு இடையிசையை அமைத்துவிடுவார். 'எங்கே என் இதயம்' பாடலில் கேட்கும் சேக்சொபோன் இடையிசை சற்றே தூக்கலான ஹாரிஸ் வாசம்.

ஆனால், மின்னலே பாடல்கள் வெளிவந்த போதும், நாம் இதையேத்தான் சொன்னோம் – "ஏ.ஆர்.ரஹ்மான்  மாதிரியே போட்டிருக்கார் என்று". ஜி.வி.பிரகாஷின் "வெயில்" பாடல்களை கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் மாதிரியே இருக்கு என்றோம். ஜோசுவா ஸ்ரீதரின் "காதல்" பாடல்களை கேட்டும் சொன்னோம். விஜய் எபெனேசர், ஏ.ஆர்.ரஹ்மான்  போல இசையமைக்கிறார் என்று சொல்லாமல்,  ஏ.ஆர்.ரஹ்மான்  போல் இசையமைக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்ட ஹாரிஸ் ஜெயராஜ் போல் இசையமைக்கிறார் என்று சொல்லும் போதே, ஏ.ஆர்.ரஹ்மான்  போல் இல்லாமல் ஹாரிஸ் ஜெயராஜ் ஏதோ செய்துக்கொண்டிருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகிறது. புதிய இசையமைப்பாளர்களை விமர்சிக்கும் விஷயத்தில்  நாம் கொஞ்சம் அவசர படுகிறோமோ என்று தோன்றுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாதிப்பு இல்லாமல் ஒரு புதிய இசையமைப்பாளர் இந்திய திரைப்படத்திற்கு  இசையமைப்பதென்பது சுலபமல்ல. இதை இசையமைப்பாளர்களே ஒத்துகொள்கிறார்கள். திரை இசையை கேட்பவர்களும் இதை உணர்ந்துவிட்டதனால், சமீபகாலமாக, புது இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரியே இசையமைக்கிறார்களே என்று யாரும் நொந்துக்கொள்வதில்லை. ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ் போல் இசையமைத்தால் சொல்லாமல் இருக்கு முடியவில்லை.

பொதுவாக, அனைத்து புது இசையமைப்பாளருக்கும் தம் இசை தனித்து கேட்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. தனித்துவத்துக்காக அவர்கள் பயன் படுத்தும் மிகவும் பரவலான எளிய யுத்திகளில் ஒன்று - புதிய குரல்களை கண்டெடுத்து, பாடல்களை பாட வைப்பது. விஜய் அந்தோனி - வினையா, ஜானகி இயர், ஜெயதேவ். ஜோசுவா ஸ்ரீதர் - ஹரிசரண். ஜேம்ஸ் வசந்தன் - தீபா மரியம், பெல்லி ராஜ். ஹாரிஸ் விதியின்படி, கண்டேன் படத்தின் 'ஒரு பார்வை' பாடலை, பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருக்க வேண்டும். சாமர்த்தியமாக, விஜய் எபெனேசர், குரு ப்ரியா என்ற புது பாடகியை பாடவைத்து தப்பித்துவிட்டார்.

என்னை பொறுத்த வரையில், ஒரு புதிய இசையமைப்பாளர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்  வகையில் திரை இசையில் புதியதாய் ஏதும் செய்யத்தேவையில்லை, ஏ.ஆர்.ரஹ்மான் இசை போல் இல்லாமல் இருந்தாலே போதும். மெட்டமைக்கும் விதத்திலும், அதை சுற்றி வாத்திய    இசையை கோர்க்கும் விதத்திலும் தனித்துவம் மிக்கவர்கள் என்று யோசிக்கும் போது  என் எண்ணத்தில் சட்டென்று தோன்றும் இசையமைப்பாளர்கள்  யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, விஜய் அந்தோணி, ரமேஷ் விநாயகம் மற்றும் சமீபத்தில் வந்தவர்களில் தேவன் ஏகாம்பரம் (பலே பாண்டியா).

போடான் கதாஸ் ஆடியோ - நல்வரவு.

Monday, January 10, 2011

பதினாறு - யுவன் ஷங்கர் ராஜா


'பதினாறு' திரைப்பட பாடல்களில் நான் அதிகம் முனுமுனுக்கும் பாடல் - 'அடடா என் மீது'. பாடல், பல்லவியில்  பரவசத்திற்கும் சரணத்தில் ஆரவாரமற்ற இனிய அமைதிக்கும் மாறி மாறி இயல்பாக பயணம் செய்கிறது. கீழ் இசை அடுக்குகளில் ஒலிக்கும் தந்திக்கருவிகளின் பிஜ்ஜிகேட்டோ (தந்திக்கருவியை வில் கொண்டு வாசிக்காமல், வீணை நரம்புகளை மீட்டுவது போல் விரலால் மீட்டப்படும் முறைக்கு பெயர் Pizzicatto) மற்றும்  செலெஸ்டா இசை துண்டுகள், 'ல ல ல ல லா ல' வென பெல்லா ஷிண்டே சரனத்தில்  உருகும் மெட்டு என்று 'அடடா என்  மீது' பாடலில் எங்கும் எதிலும் யுவன் ஷங்கர் ராஜாவின் முத்திரை. பாடலின் பிரதான மெட்டில் உள்ள வேகமும், சுறுசுறுப்பும், பரபரப்பும், பட்டாம்பூச்சியின் பரவசம் கொண்ட நம் தமிழ் சினிமா காதலர்களின் மனநிலையை யுவன் ஷங்கர் எவ்வளவு ஆழமாக புரிந்து வைத்திருக்கிறார் என்பதற்கு சான்று.

ஷங்கர் மகாதேவனின் குரலில் 'வானம் நமதே' பாடல் மிகவும் சுவாரஸ்யமானது. ஊக்கம் தந்து எழுச்சியையும், மனமாற்றத்தையும் தூண்டும் இது போன்ற பாடலில் கடம் போன்ற மெல்லிய ஒலி கொண்ட தாள வாத்தியம் பயன்படுத்தியிருப்பது, இசையமைப்பாளர் பாடலின் மெட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஆங்காங்கே மற்ற கனமான ஒலி கொண்ட தாள வாத்தியக்கருவிகள் (கேரள செண்டை) சேர்ந்துகொன்டாலும், பாடலின் மைய உணர்ச்சி ஷங்கர் மகாதேவனின் துடிப்பான குரலிலும், கடத்தில் புரளும் தாளத்திலும் பயணம் செய்கிறது. அந்த இரண்டாவது இடையிசையில், பெண்கள் கோரஸ் எட்டும் உணர்வுபுள்ளிகளில் யுவன் ஷங்கர் ராஜா தான் யார் மகன் என்பதை நினைவுபடுத்துகிறார்.

ஔது (Oud), சாரங்கி, மின்னணு தாள சப்தங்கள் அடங்கிய வார்ப்புரு கொண்டு வார்க்கபட்டுள்ள 'காட்டு செடிக்கு' பாடல், யுவன் ஷங்கர் ராஜாவின் பல பாடல்களை நினைவு படுத்துகிறது. ஆனாலும், கேட்டு தலையாட்டாமல் இருக்கு முடியவில்லை. ஒலிகலப்பு  செய்யும் போது கார்த்திக் ராஜாவின் குரல் வாத்திய இசைகூட்டுக்கு கீழ் அமுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக 'யார் சொல்லி காதல் வந்தது' பாடலில் யுவன் ஷங்கர் ராஜாவின் குரலை அமுக்கியிருக்கலாம். யுவன் பாடியதாலோ என்னவோ, 'யார் சொல்லி' மனதில் நிற்கவில்லை. தீம் மியூசிக், 'காட்டு செடிக்கு' பாடலின் தொடர்ச்சி போல இருக்கிறது. இனிய புல்லாங்குழலில் புதிய மெட்டுடன் தொடங்கினாலும், தீம் மியூசிக் சட்டென்று 'காட்டு செடிக்கு' பாடலின் இடையிசைக்கு தாவுகிறது. பொதுவாக, இது போன்ற தீம் இசை துணுக்குகள் ஒரு பாடலின் பிரதான மெட்டை வைத்தே அமைக்கப்படும், ஆனால் இதில் ஒரு பாடலின் இடைஇசையை யுவன் பயன்படுத்திஇருக்கிறார். 

'பதினாறு' படத்தில், யுவனின் இசை, ஏற்கனவே பலமுறை கேட்டது போல் இருந்தாலும், சலிப்பு ஏற்படுத்துவதாக இல்லை. பாடல் புதுமையாக இருப்பதை விட இனிமையாக இருப்பதே முக்கியம்.

ஜனவரி 16 ஆம் தேதி யுவன் ஷங்கர் ராஜாவின் கச்சேரி சென்னை YMCA மைதானத்தில் நடக்கவிருக்கிறது. நேரு உள் விளையாட்டு அரங்கம் என்ன ஆச்சு? அன்று எதாவது மீண்டும் கலைஞருக்கு பாராட்டு விழா நடக்கிறதா?  யுவன் கச்சேரிக்கு நான் போகப்போவதில்லை. திறந்தவெளி மைதான கச்சேரிகளில் தொல்லைகள் அதிகம். இசையின் இனிமை காற்றில் பறந்துவிடுகிறது. கூட்டத்தின் கூச்சலே அதிகமாக கேட்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்புவார்கள், அதை யாராவது பதிவு செய்து விளம்பரம் இல்லா வீடியோ பகுதிகளாக இணையத்தில் ஏற்றுவார்கள், அவற்றை தரவிறக்கி பார்த்துகொள்கிறேன். ரஹ்மானோட ஜெய் ஹோ கச்சேரிகளை போல இல்லாமல் இசைக்கு அதிக  முக்கியத்துவம் கொடுத்தால் நன்று. கச்சேரியில் யுவனின் திரை பின்னணி இசை துண்டுகள் கொண்ட ஓர் தொகப்பை எதிர்பார்க்கலாமா? கச்சேரியின் விளம்பரத்திற்காக யுவன் வெளியிட்டிருக்கிற ஒற்றை பாடல் அருமை. ஆனால், I will not be there for you Yuvan.

Sunday, January 9, 2011

ஆடுகளம் - ஜி.வி பிரகாஷ்


தனுஷ், வெற்றி மாறன், ஜி.வி பிரகாஷ் கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன் படத்தின் பாடல்கள்  எதுவும் எனக்கு அவ்வளவாக இப்போது நினைவில் இல்லை. ஆனால் இவர்கள் கூட்டணியில் அடுத்து வெளி வரப்போகும் ஆடுகளம் படத்தின் பாடல்கள் நிச்சயமாக நினைவில் நிற்கும்.
இளையராஜாவின் இஞ்சி இடுப்பழகாவை நினைவுபடுத்தும் தாளம் கொண்ட 'ஐயய்யோ' பாடல் ரம்யம். எஸ்.பி.பியின் குரலில் உள்ள கொஞ்சலும், கெஞ்சலும், தவிப்பும்  - ஐயய்யோ!  மெல்லிய குழலிசை பாடல் முழுதும் படர்ந்தோடி நம்மை தென்றலாய் வருடுகிறது. ஜி.வி பிரகாஷின் நேர்த்தியான இசைக்கூட்டு  கேட்போரை சுற்றி ஒரு இனிய காதல் சூழலை எளிதாக பரப்பிவிடும். இசைதட்டை பார்த்துதான் எஸ்.பி.பி.சரணும் கூட பாடியிருக்கிறார் என்பதை அறிந்தேன். காட்சியில் ஒரு கதாபாத்திரம் மட்டுமே வாயசைக்க போகும் பாட்டுக்கு பல குரல்களை உபயோகிக்கும் மோசமான பழக்கம் ரஹ்மானிடம் இருந்து எல்லோருக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது. இசையமைப்பாளர்கள், ஒரே பாடலை பல பாடகர்களை பாடவைத்து ஒலிப்பதிவு செய்து விடுகிறார்கள். இறுதியில் யாருடைய குரலை வைத்துக்கொள்வது என்று குழம்பி, எந்த பாடகரும் அந்த பாடலை சொந்த கொண்டாட முடியா வகையில், இவர் பாடியதில் ஒரு வரி, அவர் பாடியதில் ஒரு வரி என்று மாற்றி மாற்றி போட்டு, சேர்த்து, கோர்த்து விடுகிறார்கள்.
'யாத்தேபாடலில் ஜி.வி பிரகாஷின் மென்மையான மெட்டும் புதுமையான தாளக்கட்டும், காதல் வயப்பட்ட ஓர் இளைஞனின் ஆழ்மனதில் எழும் உணர்சிகளுக்கு இசை வடிவம் தந்திருக்கின்றது. இடையிடையில் துள்ளலான நாட்டுப்புற தாளத்துடன் வரும் 'யாத்தே யாத்தே' நம்மை ஆட வைக்கிறது. ஜி.வி பிரகாஷ் அனுபவித்து பாடியிருக்கிறார். ஆனால், ஏன் இவரால் நான்கு வரி கூட சேர்த்து பாடமுடியாதா? ஒவ்வொரு வார்த்தையாக பாடி, வெட்டி ஒட்டி பாடலாக கோர்த்திருக்கிறார். பாடலின் முடிவில் மேற்கத்திய சர்ச் கோரஸ் - தனுஷ் காதலிப்பது கிறித்துவ பெண்ணையோ?
'ஒத்த சொல்லால'  ஆடுகளம் திரைப்படத்தின் சிறந்து பாடல் என்று சொல்வது சற்று மிகையாக தோன்றலாம், ஆனால் உண்மை. குத்து பாட்டு என்று சொன்னால், பாடல் தரத்தில் குறைவு என்ற கூறுவதை போல் ஆகிவிட்டது. இது அந்த வகை குத்துபாட்டு அல்ல. நாட்டுப்புற பாட்டு என்று சொன்னால் மரியாதையாக இருக்குமோ? நாம் கேட்டு பழகிப்போன தாளம்தான் என்றாலும், பாடலின் மெட்டும், வரிகளும் உடனடியாக நம் மனதில் தொற்றிகொள்கிறது. 'பச்சை தண்ணி போல் என்ன சொம்புக்குள்ள ஊத்தி வெச்சு நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா' வரியில் இருக்கும் கற்பனை (பாடலாசிரியர் - ஏகாதசி), அதன் எளிமை, இனிமை யாத்தேவிலோ, ஐய்யய்யோவிலோ இல்லை. மண் வாசனை வீசும் வேல்முருகனின் குரல், தமிழ், அதில் அருவி போல் கொட்டும் உணர்சிகள் பாடலை ஒரு படி மேலே எடுத்துசெல்கிறது.
'போர்க்களம்' மற்றும் 'Warriors' போன்ற பாடல்கள் திரைப்படத்தில் இருப்பதற்கு, வெற்றி மாறன் ராப் இசை மற்றும் யோகி பியின் விசிறி என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது. எனக்கு ராப் இசை பிடிக்குமா பிடிக்காதா என்பது முக்கியமில்லை, ராப் இசை ஆடுகளத்தின் களத்திற்கும் கதையோட்டதிர்க்கும் பொருந்துமா பொருந்தாதா என்பதே இங்கு கேட்க பட வேண்டிய கேள்வி. செல்வராகவன் சொல்லி யுவன் ஷங்கர் ராஜா 'புதுபேட்டை' படத்திற்கு சிம்போனி உபயோகித்தது போல் தான் இதுவும். இது ஆடுகளம் திரைப்படத்தின் பாடல் என்பதை மறந்துவிட்டு கேட்டால், பாடல் நன்றாகத்தான் இருக்கிறது. முக்கியமாக யுகபாரதி மெனக்கெட்டிருக்கிறார். ராப் இசையின் மீட்டருக்கு அர்த்தமுள்ள தமிழ் பாடல் எழுதுவது சுலபமல்ல.
ஜி.வி பிரகாஷ், தான் திரைப்படத்தின் பின்னணி இசையில் உபயோகிக்க போகிற ஓரிரண்டு மையஇசை துண்டை திரைப்படத்தின் இசைத்தட்டில் பெரும்பாலும் வெளியிடுகிறார். ஆடுகளம் இசைத்தட்டில் இருக்கும் 'லவ் ப்லாசம்ஸ்' என்கிற பாடல் அப்படியொரு மையஇசை துணுக்கு. பாடலில்  உள்ள கோரஸ் மற்றும் குழலிசை, காதல் மலரும் தருணத்தின் பரவசத்தையும், தாளம், மனதில் ஏழும் துள்ளலையும் இசையாக்கி ஒலிக்கிறது. கே. கே பாடியிருக்கும் 'ஏன் வெண்ணிலவே' பாடல் இழுவையோ இழுவை. சோக பாடல். பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஒரு திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழா எப்படி நடக்க வேண்டும் என்பதை கெளதம் வாசுதேவ் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் செய்து காட்டியும், யாரும் இங்கு திருந்துவதாக இல்லை. சன் Pictures திருந்தவிடப்போவதில்லை என்றும் சொல்லலாம்.  ஆடுகளம் திரைப்படத்தின் இசை  வெளியீட்டு விழாவை சன் தொலைகாட்சியில் பார்த்தேன். எங்கும் எதிலும் போலித்தனம். மறைவில் இசைத்தட்டு ஒலித்துகொண்டிருக்க, பாடகர்கள், பாடலை தாமே மேடையில் பாடவுது போல் நடித்துகொண்டும் நடனமாடிக்கொண்டும் இருந்தார்கள். சிறப்பு விருந்தினர்கள் அவரவர் பங்குக்கு படத்தில் சம்மந்தப்பட்ட எல்லோரையும் வானளாவ புகழ்ந்து விட்டு இருக்கையில் அமர்ந்தார்கள். இடையிடையில் எரிச்சலூட்டும் விஜய் சாரதி.  90% அனைத்து இசை வெளியீட்டு விழாக்களும் இப்படித்தான் நடக்கின்றது - ஒரு  திரைப்படத்தின் பிரதான விளம்பர விழாவாக.